சொந்த கார்களை வாடகைக்கு விடுவது அதிகரிப்பு; சுற்றுலா வாகன உரிமையாளர்கள் பாதிப்பு

சொந்த பயன்பாட்டுக்கு கார்கள் வைத்து இருப்பவர்கள் அவற்றை வாடகைக்கு விடுவதால் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Update: 2019-07-06 22:45 GMT
தேனி,

தேனி, பெரியகுளம், கம்பம், போடி, ஆண்டிப்பட்டி, சின்னமனூர் பகுதிகளில் கார், வேன், பஸ் போன்ற சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் உள்ளன. சுற்றுலா வாகனங்கள் ஓட்டுவதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருவாய் ஈட்டி வருகின்றனர். சுற்றுலா நிறுவனங்களில் உள்ள வாகனங்களை ஓட்டும் பணியின் மூலம் வேலைவாய்ப்பும் பெற்று வருகின்றனர். சுற்றுலா வாகனங்கள், பயணிகள் வாகனங்களில் வாகன பதிவு எண் பலகை மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதே நேரத்தில் சொந்த பயன்பாட்டுக்கு வைத்துள்ள வாகனங்களில் வாகன பதிவு எண் பலகை வெள்ளை நிறத்தில் இருக்கும். தேனி மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், சொந்த பயன்பாட்டுக்கு வைத்துள்ள கார்களை பலர் வாடகைக்கு விடுவது அதிகரித்து வருகிறது. கேரள மாநிலத்துக்கு சொந்த பயன்பாட்டுக்கு வைத்துள்ள வாகனங்களை எடுத்துச் செல்லும் போது வட்டார போக்குவரத்து துறையில் நுழைவு அனுமதிச்சீட்டு பெற வேண்டியது அவசியம் இல்லை. அதே நேரத்தில் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு அனுமதிச்சீட்டு பெற வேண்டும். இதற்கு குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆனால், மாவட்டத்தில் சொந்த பயன்பாட்டுக்கு உள்ள வாகனங்களை சுற்றுலா வாடகை வாகனமாக பயன்படுத்துவதால், வாடகை வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, சொந்த பயன்பாட்டுக்கு வைத்துள்ள கார்களை வாடகைக்கு விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்