பெரியகுளம் அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை; ராணுவ வீரர் உள்பட 4 பேர் மீது வழக்கு

பெரியகுளம் அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்ததாக ராணுவ வீரர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2019-07-06 22:30 GMT
தேனி,

பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த ராமசாமி மகன் உதயகுமார் (வயது 35). இவர் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி வெங்கிட்டம்மாள் (27). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணமான 3-வது நாளிலேயே வெங்கிட்டம்மாளை அவருடைய மாமியார் முத்தாய் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. திருமணமான ஒரு மாத காலத்தில் உதயகுமார் ராணுவ பணிக்கு சென்று விட்டார். இந்நிலையில் வெங்கிட்டம்மாள் தனது நகைகளை தரும்படி மாமியாரிடம் கேட்டதற்கு, அதை உதயகுமார் அடகு வைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், வெங்கிட்டம்மாளை தீபாவளி சீர்வரிசை, வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், ஏற்கனவே கொடுத்த நகைகள், சீர்வரிசை பொருட்களை கொடுக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் வெங்கிட்டம்மாள் புகார் செய்தார்.

அதன்பேரில் தேனி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, வெங்கிட்டம்மாளின் கணவர் உதயகுமார், மாமனார் ராமசாமி, மாமியார் முத்தாய் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்