கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல 13 நாட்களாக தடை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல 13 நாட்களாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Update: 2019-07-06 23:00 GMT
கொடைக்கானல்,

‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா இடங்கள் வனப்பகுதியில் அமைந்துள்ளன. இதில் குறிப்பாக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரி பகுதி புகழ் பெற்றதாகும். இங்கு லட்சக்கணக்கான மரங்களுடன் இயற்கையான ஏரியும் உள்ளதால் சுற்றுலா பயணிகள் இங்கு செல்ல அதிக ஆர்வம் கொள்வார்கள்.

மேலும் இங்கு செல்லும் வழியில் தொப்பி தூக்கி பாறை, பேரிஜம் ஏரி வியூ, மதிகெட்டான் சோலை உள்பட பல்வேறு இயற்கையான சுற்றுலா இடங்கள் உள்ளன. இங்கு செல்வதற்கு வனத்துறை அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி அனுமதி பெற்ற பின்னரே செல்ல வேண்டும்.

ஆனால் கடந்த 24-ந் தேதி முதல் யானைகள் நடமாட்டம் உள்ளதாக கூறி சுற்றுலா பயணிகளுக்கு பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. நேற்றும் 13-வது நாளாக தடை நீடிப்பதால் பேரிஜம் ஏரிக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், ஒரே நாளில் அனைத்து இடங்களையும் பார்த்துவிட்டு திரும்பி செல்கின்றனர். ஆனால் பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதி அளித்தால் 2 நாட்கள் தங்க வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக கொடைக்கானலின் பொருளாதார நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 300-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளதால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்து உள்ளனர். இந்நிலையில் மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் மற்றும் பேரிஜம் ஏரி ஆகியவை மூடப்பட்டதின் காரணமாக பலர் வேலை இழக்கும் நிலையும் ஏற்பட்டு உள்ளது.

எனவே வனத்துறையினர் பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்வதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்