நெல்லை மாவட்டத்துக்கு 10 புதிய பஸ்கள் அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்
நெல்லை மாவட்டத்தில் 10 புதிய பஸ்களின் போக்குவரத்தை அமைச்சர் ராஜலட்சுமி நேற்று தொடங்கி வைத்தார்.
நெல்லை,
தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 500 புதிய நவீனமயமாக்கப்பட்ட பஸ்கள் வாங்கப்பட்டன. இந்த பஸ்களை சென்னையில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதில் நெல்லை அரசு போக்குவரத்து கழக கோட்டத்துக்கு 30 பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் 10 பஸ்கள் நெல்லை மாவட்டத்தில் பணிமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த பஸ்களின் போக்குவரத்து தொடக்க விழா நெல்லை புதிய பஸ்நிலையத்தில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் ராஜலட்சுமி தலைமை தாங்கி புதிய பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் ஷில்பா, எம்.பி.க்கள் முத்துகருப்பன், விஜிலா சத்யானந்த், இன்பதுரை எம்.எல்.ஏ., நெல்லை மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, அரிகரசிவசங்கர், போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வெம்பலம் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
10 பஸ்களில் 2 பஸ்கள் சுரண்டையில் இருந்து கொட்டாரக்கரைக்கு புதிய வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் இயக்கப்படுகின்றன. மற்ற 8 பஸ்கள் பழைய பஸ்களுக்கு பதிலாக இயக்கப்படுகிறது. அதாவது சங்கரன்கோவில் -மதுரை, வள்ளியூர் -திருச்சி, திசையன்விளை -ராமேசுவரம், பாபநாசம் -ராமேசுவரம், புளியங்குடி -திருச்செந்தூர், தென்காசி -திருச்சி, நெல்லை -திருப்பூர், செங்கோட்டை -திருப்பூர் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்கள் மாசுபாட்டை குறைக்கும் வகையில் ‘பி.எஸ்-4’ என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. விபத்துகளை தடுக்கும் வகையில் பிரேக், வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. எளிதில் தீப்பிடிக்காத பொருட்களால் கூண்டு கட்டப்பட்டுள்ளது. மேலும் மழை காலத்தில் பஸ் ஒழுகாமலும், கோடை காலத்தில் அதிக வெப்பம் ஏற்படாமல் இருப்பதற்கும் 5 அடுக்குகள் கொண்ட தெர்மாகோலுடன் கூடிய மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.