விலையில்லா மடிக்கணினி கேட்டு கலெக்டர், எம்.எல்.ஏ.வை முற்றுகையிட வந்த முன்னாள் மாணவர்களை விரட்டிய போலீசார்

விலையில்லா மடிக்கணினி கேட்டு கலெக்டர், எம்.எல்.ஏ.வை முற்றுகையிட வந்த முன்னாள் பிளஸ்-2 மாணவர்களை போலீசார் விரட்டினர். அப்போது அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2019-07-06 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் 2017-18, 2018-19-ம் கல்வி ஆண்டுகளில் பிளஸ்-2 படித்து முடித்த மாணவ- மாணவிகளுக்கு இன்னும் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. அந்த மாணவ- மாணவிகள் எங்களுக்கும் மடிக்கணினிகள் உடனடியாக வழங்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாகவே, அவர்கள் படித்த பள்ளிகளின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முதற்கட்டமாக மாவட்டத்தில் தற்போது பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்க கலெக்டர், எம்.எல்.ஏ. வருகை தருவதை பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 2017-18, 2018-19-ம் கல்வி ஆண்டுகளில் பிளஸ்-2 படித்து முடித்த முன்னாள் மாணவ- மாணவிகள் அறிந்தனர். இதையடுத்து நேற்று காலை அவர்கள் ஒன்று சேர்ந்து கலெக்டர், எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு எங்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் எப்போது வழங்குவார்கள் என்று கேட்பதற்காக பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே கூடினர்.

சாலை மறியல்

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விழாவிற்கு கலெக்டர், எம்.எல்.ஏ. வருவதற்குள் மடிக்கணினி கேட்டு வந்திருந்த முன்னாள் பிளஸ்-2 மாணவ- மாணவிகளை அந்த இடத்தை விட்டு ஓட, ஓட துரத்தினர். இதனால் அந்த மாணவ- மாணவிகள் ஊர்வலமாக பெரம்பலூர் அரசு மருத்துவமனை, பழைய பஸ் நிலையம், காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, ரோவர் ஆர்ச் வளைவு வழியாக மடிக்கணினிகள் எங்களுக்கும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோஷத்துடன் பாலக்கரை ரவுண்டானா பகுதிக்கு வந்தனர். அவர்களை பின்தொடர்ந்து போலீசார் துரத்தி வந்தனர். இந்நிலையில் ஆத்திரமடைந்த அந்த மாணவ- மாணவிகள் திடீரென்று பாலக்கரை ரவுண்டானா அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் மடிக்கணினிகள் எங்களுக்கும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோஷத்தை தொடர்ந்து எழுப்பி கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரன், வேப்பூர் கல்வி மாவட்ட அலுவலர் குழந்தைராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின்போது மாணவ- மாணவிகள் எங்களுக்கு வருகிற திங்கட் கிழமை அல்லது செவ்வாய்க் கிழமைக்குள் மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி அலுவலரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து மாணவ- மாணவிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்