புதிய கட்டிட வரைபடத்தில் மழைநீர் சேகரிப்பு அமைவிடம் குறிப்பிட்டால் மட்டுமே அனுமதி
புதிய கட்டிட வரைபடத்தில் மழைநீர் சேகரிப்பு அமைவிடம் குறிப்பிட்டால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
சேலம்,
சேலம் சூரமங்கலம் திருமால்நகர் பகுதியில் பொதுமக்களிடையே மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். அப்போது சதீஷ் பேசியதாவது:-
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 676 அரசு அலுவலக கட்டிடங்கள், 940 தொழிற்சாலை கட்டிடங்கள், 23,206 வணிக ரீதியான கட்டிடங்கள் மற்றும் 1 லட்சத்து 72 ஆயிரத்து 568 குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளதா? எனவும், அது முறையாக பராமரிக்கப்படுகிறதா? எனவும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க பொறியியல் பிரிவு அலுவலர், பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொதுமக்கள் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கும் போது, கட்டிட வரைபடத்தில் மழைநீர் சேகரிப்பு அமைவிடத்தை தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பித்தால் மட்டுமே கட்டிட அனுமதி வழங்கப்படும். மேலும், கட்டிட கட்டுமான பணிகளின் போது மாநகராட்சி பொறியியல் பிரிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆய்வின்போது மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டுமான பணிகளை உறுதி செய்த பின்னரே அந்த கட்டிடத்தின் சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டு அதற்கான ஆணை வழங்கப்படும்.
குறிப்பாக திரையரங்குகள், உணவகங்கள், தனியார் வணிக வளாகங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் உடனடியாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர பொறியாளர் அசோகன், மாநகர் நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர்கள் சுந்தரராஜன், பாஸ்கரன், கவிதா, ரமேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.