ஓசூரில் ஏரியில் குதித்து தம்பதி தற்கொலை: 11 நாட்களுக்கு பிறகு குழந்தையின் உடல் மீட்பு
ஓசூரில் ஏரியில் குதித்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது குழந்தையின் உடல் 11 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தர்கா சந்திராம்பிகை ஏரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் மற்றும் பெண் ஒருவரின் உடல்கள் மிதந்தன. அதை டவுன் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் கண்ணன் (வயது 31), அவரது மனைவி கல்பனா (27) என தெரிய வந்தது.
கண்ணன் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்ததும், கேரளா மாநிலத்திற்கு பணி இடமாறுதல் ஆகி உள்ளதாக கடந்த 26-ந் தேதி தாய் முத்தம்மாளிடம் போனில் கண்ணன் பேசியதும் தெரிய வந்தது. இந்த நிலையில் தான் கணவன் - மனைவி 2 பேரும் ஏரியில் குதித்து தற்கொலை செய்துள்ளனர். கடன் தொல்லை காரணமாக அவர்கள் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கணவன் - மனைவி 2 பேரும் தற்கொலை செய்து கொள்ளும் முன்னதாக அவர்களின் குழந்தை கபிலனை (2) ஏரியில் வீசி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் குழந்தையின் உடலை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கடந்த சில நாட்களாக தேடி வந்தனர். ஆனால் குழந்தையின் உடல் கிடைக்கவில்லை.
இதற்கிடையே அவர்கள் குழந்தையை வேறு எங்காவது விட்டு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் குழந்தையை தேடும் பணி நிறுத்தப்பட்டது. ஆனால் குழந்தையை பற்றி எந்த துப்பும் கிடைக்காததால் மீண்டும் குழந்தையை ஏரியில் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் 11 நாட்களுக்கு பிறகு நேற்று குழந்தையின் உடல் அழுகிய நிலையில் ஏரியில் மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குழந்தையின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.