தர்மபுரி, கிருஷ்ணகிரியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, கிருஷ்ணகிரியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-06 22:45 GMT
தர்மபுரி,

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு லெனின் மகேந்திரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் நாகராசன், திட்ட செயலாளர் ஜீவா மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

கிருஷ்ணகிரி மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரில், கிருஷ்ணகிரி கிளை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய அமைப்பின் திட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் நஞ்சுண்டன், மத்திய அமைப்பின் திட்ட செயலாளர் கருணாநிதி, ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில துணைத் தலைவர் கிருஷ்ணன், கிளை திட்ட செயலாளர் துரை, மத்திய அமைப்பின் இணை செயலாளர் ராஜேந்திரன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு தங்கமலர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மின்வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்திட வேண்டும். கேங்க் லீடர் பதவிக்கு ஒப்பந்த தொழிலாளர்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு தளர்த்தி முன்னுரிமை அளித்திட வேண்டும். கே2 அக்ரிமெண்டில் பணி செய்தவர்களுக்கு உரிய தொகையினை உடனடியாக வழங்க வேண்டும்.

அனைத்து கள பணிகளுக்கும் ஒப்பந்த தொழிலாளர்களை பயன்படுத்திவிட்டு, ஒப்பந்த தொழிலாளர்களே இல்லை என்ற அறிக்கையினை அனுப்ப கூடாது. ஒப்பந்த தொழிலாளர்கள் மின்வாரிய பணியின்போது விபத்தில் சிக்கினால் மருத்துவ செலவினத்தை மின்வாரியமே அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்