தர்மபுரியில் விலையில்லா மடிக்கணினி வழங்க கோரி மாணவிகள் சாலை மறியல்

தர்மபுரியில் விலையில்லா மடிக்கணினி வழங்க கோரி அரசு பள்ளி முன்பு மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-06 23:00 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், பெரியாம்பட்டி பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இதேபோல் தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பிளஸ்-2 படித்த மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்த 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளி முன்பு திரண்டனர். இவர்கள் தங்களுக்கும் மடிக்கணினி வழங்க கோரி திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் பங்கேற்ற மாணவிகள் இதுவரை எங்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை. விலையில்லா மடிக்கணிகளை எங்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது விலையில்லா மடிக்கணினி கிடைக்காத மாணவிகளுக்கு அவற்றை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து மாணவிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்