மக்களிடையே எந்தவித பாகுபாடும் இன்றி அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்ற வேண்டும் பயிற்சி முடித்த போலீசாருக்கு கூடுதல் டி.ஜி.பி. அறிவுரை
மக்களிடையே எந்தவித பாகுபாடும் இன்றி அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்ற வேண்டும் என்று தர்மபுரியில் பயிற்சி முடித்த போலீசாருக்கு கூடுதல் டி.ஜி.பி. அசோக்குமார்தாஸ் அறிவுறுத்தினார்.;
தர்மபுரி,
தமிழ்நாடு காவல் துறையில் 2-ம் நிலை போலீசாராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 186 பேருக்கு தர்மபுரியில் உள்ள தற்காலிக போலீஸ் பயிற்சி பள்ளியில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந்தேதி முதல் அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இவர்களுக்கு உடற்பயிற்சி, கவாத்து பயிற்சி, ஆயுதப்பயிற்சி, கமாண்டோ பயிற்சி, சட்ட பயிற்சி, கணினி பயிற்சி, இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை ஓட்டும் பயிற்சி, நீச்சல் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த பயிற்சிகளோடு பல்வேறு துறைகளை சேர்ந்த வல்லுனர்கள் மூலம் சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.
இந்த 7 மாத கால பயிற்சி முகாமின் நிறைவு விழா மற்றும் பயிற்சி முடித்த போலீசார் நாட்டு பணிக்காக தங்களை அர்ப்பணித்து கொள்ளும் விழா தர்மபுரி ஆயுதப்படை மைதான வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் தொழில்நுட்ப சேவை பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அசோக்குமார்தாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி முடித்த போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். கலெக்டர் மலர்விழி, போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கூடுதல் டி.ஜி.பி. அசோக்குமார் தாஸ் பேசுகையில், காவல்துறையில் இணைந்துள்ள போலீசாருக்கு தர்மபுரியில் சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. பயிற்சி பெற்ற போலீசார் காவல் பணியை ஏற்றபின் அவர்களுடைய பொறுப்புகள் கூடுகின்றன. சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. தற்போது பயிற்சி முடித்தவர்களில் பட்டப்படிப்பு, டிப்ளமோ உள்பட பல்வேறு உயர்படிப்புகளை படித்தவர்களும் இருக்கிறீர்கள். உங்கள் படிப்பால் கிடைத்த அறிவை காவல் பணியின் மேம்பாட்டிற்கு நீங்கள் பயன்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் இந்த துறையில் எத்தகைய உயர் பதவிக்கு வந்தாலும் நீங்கள் மக்களிடையே எந்தவித பாகுபாடும் இன்றி அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
விழாவில் சிறப்பான முறையில் பயிற்சி மேற்கொண்ட போலீசாருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை அவர் வழங்கினார். விழாவில் பயிற்சி போலீசாரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் போலீஸ் அதிகாரிகள், பயிற்சி போலீசாரின் பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.