கடலூர் முதுநகரில் பயங்கரம் கள்ளக்காதல் விவகாரத்தில் கண்டக்டர் சரமாரி வெட்டிக்கொலை
கடலூர் முதுநகரில் கள்ளக்காதல் விவகாரத்தில் கண்டக்டர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தம்பியுடன், ஆசிரியர் சிதம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
கடலூர் முதுநகர்,
இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கடலூர் முதுநகர் மணக்குப்பத்தில் நேற்று காலை வாலிபர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். நீலநிற கட்டம்போட்ட லுங்கி மட்டும் அவர் அணிந்து இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது வாலிபரின் கழுத்து, தலை, உடல் என பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. கைவிரல் ஒன்று துண்டாகி இருந்தது. அவரை மர்மநபர்கள் கொலை செய்திருப்பது தெரியவந்தது. அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, என்ற விவரம் எதுவும் தெரியவில்லை?.
இதையடுத்து கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை புகைப்படம் எடுத்து அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று விசாரித்தனர். ஆனால் கிராம மக்கள், அந்த வாலிபர் யார்? என்று தெரியாது என கூறிவிட்டனர்.
இதன் பின்னர் சமீபத்தில் காணாமல் போனவர்கள் பற்றி, கடலூர் மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கு வந்த புகார் பட்டியலை பெற்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில், குள்ளஞ்சாவடி அருகே உள்ள கருமாச்சிப்பாளையம் வள்ளலார் தெருவை சேர்ந்த கோவிந்தராஜன்(வயது 34) என்பவர் சமீபத்தில் காணாமல் போனதும், அவர்தான் கொலை செய்யப்பட்டு கிடப்பதும், கடலூர்-விருத்தாசலம் செல்லும் தனியார் பஸ்சில் கண்டக்டராக கோவிந்தராஜன் பணி புரிந்து வந்ததும் தெரியவந்தது.
கோவிந்தராஜனுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் மனைவி ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதை ஆசிரியர் குடும்பத்தினரும், கோவிந்தராஜனின் மனைவியின் உறவினர்களும் கண்டித்தனர். ஆனால் அவர் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிந்தராஜன், ஆசிரியரின் மனைவியுடன் வெளியூர் சென்று விட்டார். இதனால் பதறிப்போன இரு குடும்பத்தை சேர்ந்தவர்கள், பல இடங்களில் தேடிப்பார்த்தும் இருவரும் கிடைக்கவில்லை. இதையடுத்து கடந்த 3-ந் தேதி கோவிந்தராஜனை காணவில்லை என்று அவரது குடும்பத்தினரும், தனது மனைவியை காணவில்லை என்று ஆசிரியரும் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.
இதற்கிடையில் கோவிந்தராஜன், தனது கள்ளக்காதலியுடன் சென்னையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இரு வீட்டாரின் உறவினர்களும் சென்னைக்கு சென்று அவர்களை ரெயிலில் ஊருக்கு அழைத்து வந்தனர். கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்துக்கு வந்த ஆசிரியரின் மனைவிக்கும், கோவிந்தராஜனுக்கும் இரு வீட்டு உறவினர்களும் அறிவுரை கூறினர். இதன் பிறகும் கோவிந்த ராஜன், ஆசிரியர் மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிட வில்லை என கூறப்படுகிறது. சம்பவத்தன்று கோவிந்தராஜன் நத்தப்பட்டில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு நத்தப்பட்டில் உள்ள நண்பர் வீட்டில் கோவிந்தராஜன் இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் அவரை இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றதாகவும், அதன் பிறகு அவர் நண்பர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் கோவிந்தராஜன் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். இதனால் ஆசிரியர் மனைவியிடம் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் நத்தப்பட்டில் நண்பர் வீட்டில் இருந்த அவரை மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று கடலூர் முதுநகர் மணக்குப்பத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளி ஆசிரியர் ராஜமுருகன், இவரது தம்பி ராஜசிம்மன் ஆகியோர் சிதம்பரம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நேற்று காலை சரண் அடைந்தனர். இருவரையும் வருகிற 9-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கீதா உத்தரவிட்டார்.
இதனால் இவர்கள் இருவரும் சேர்ந்து கோவிந்தராஜனை கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இவர்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் முடிவுசெய்துள்ளனர்.
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜனின் நண்பர் ஒருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பஸ் கண்டக்டர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடலூர் முதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.