தூத்துக்குடியில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
தூத்துக்குடியில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி,
தமிழக அரசின் உத்தரவுப்படி மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், முதற்கட்டமாக பள்ளி, கல்லூரிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகளை அமைப்பதை வலியுறுத்தும் விதமாகவும் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், பள்ளி மற்றும் கல்லூரிகளின் நிர்வாகிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் வி.பி.ஜெயசீலன் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை எவ்வாறு ஏற்படுத்துவது என்பது குறித்து பொறியாளர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் அது தொடர்பான குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டது. அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை மேற்கொள்வதற்கு, புதுப்பித்தலுக்குரிய தொழில் நுட்ப ஆலோசனைகள் மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜித்சிங் கலோன், மாநகராட்சி முதுநிலை நகரமைப்பு அலுவலர் மாறன், மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.