பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.
திருவண்ணாமலை,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார். இங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நலிந்த வணிகர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார். ரூ.1½ கோடிக்கு குறைவாக வணிகம் செய்யும் வணிகர்களுக்கு மட்டும் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். இன்னமும் அதில் சற்று மாற்றம் செய்து சாமானிய வணிகர்களும் ஓய்வூதிய திட்டம் மிகைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நேரில் சந்தித்து அவரிடம் மனுதர இருக்கிறோம். அன்றாடம் பயன்படுத்தக்கூடிய உணவு பொருட்களுக்கு வரி விலக்கு தருவார்கள் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் அவ்வாறு வரிவிலக்கு அளிக்கப்படவில்லை. இது ஏமாற்றம் அளிக்கிறது.
ஜி.எஸ்.டி. மூலமாக ரூ.100 கோடி வருவாய் ஏற்பட்டால் டோல்கேட் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் இப்பொழுது டோல்கேட் கட்டணத்தை பற்றிய அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்.
பட்ஜெட்டில் ஆறுகள் இணைப்பு பற்றி வரும் என்று இருந்தோம். அது வராததால் எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. டீசல், பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினாலும் கூட மீண்டும் ரூ.2.30 காசுக்கு மேல் டீசல், பெட்ரோல் விலை ஏற்றப்பட்டு இருக்கிறது.
இந்த டீசல், பெட்ரோல் விலை உயர்வால் வாடகை விகிதங்கள் உயரும், விலைவாசி உயரும். எனவே இதை அரசு கருத்தில் கொண்டு உடனடியாக டீசல், பெட்ரோல் விலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழைநீர் சேகரிப்புக்கு ஏரிகளை தூர்வாரவும், கால்வாய்களை தூர்வாரவும் சொன்னாலும் மாவட்டம் வாரியாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் தயாராக இருக்கிறார்கள். மழைநீர் சேகரிப்பு என்பது பொதுமக்கள் மத்தியில் திணிப்பதை விட அரசே முன் உதாரணமாக இருந்து செயல்பட வேண்டும். மழை நீரை சேமித்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆக்கப்பூர்வமான பணிகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில துணைத்தலைவர் ராஜசேகரன், மாவட்ட தலைவர் மண்ணுலிங்கம், பொருளாளர் செந்தில்மாறன், வேலூர் மண்டல தலைவர் கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.