இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்பு: ‘அணை உடைப்புக்கு நண்டுகள் தான் காரணம்’ - மந்திரி கருத்துக்கு கடும் எதிர்ப்பு
மராட்டியத்தில் அணை உடைந்த விபத்தில் இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இந்த விபத்துக்கு நண்டுகளே காரணம் என மந்திரி கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.;
மும்பை,
மராட்டியத்தில் பெரு மழை காரணமாக ரத்னகிரி மாவட்டத்தின் சிப்லுன் தாலுகாவில் திவாரே என்ற மண்ணால் கட்டப்பட்ட அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த 3-ந் தேதி இரவு திடீரென இந்த அணை உடைந்ததால், அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள 7 கிராமங்களை சூழ்ந்தது. அந்த கிராமங்களை சேர்ந்த 12 வீடுகளை வெள்ளம் அடித்து சென்றது. மேலும் வெள்ளத்தில் சிக்கி 23 பேர் அடித்து செல்லப்பட்டனர்.
இதில் 18 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இந்த விபத்துக்கு ஆளும் கட்சியின் அலட்சியப்போக்கே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் அணையை கட்டிய ஒப்பந்ததாரரான சிவசேனா எம்.எல்.ஏ. சதானந்த் சவான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் வலியுறுத்தினார்.
இந்தநிலையில் மராட்டிய நீர்வளத்துறை மந்திரி தானாஜி சாவந்த் அணை உடைப்பு விபத்துக்கு நண்டுகள் தான் காரணம் என புதிய விளக்கம் அளித்தார்.
இது குறித்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அதிக அளவில் இருந்த நண்டுகளால் தான் அணையின் தடுப்பு பலவீனம் அடைந்ததாக உள்ளூர் மக்களும் மற்றும் அதிகாரிகளும் தெரிவித்து உள்ளனர். நண்டுகள் தான் அணை உடைப்புக்கு காரணம் என அதிகாரிகள் தெரியப்படுத்தியதை அடுத்து சில தீர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுமட்டும் இன்றி வெறும் 8 மணி நேரத்தில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 192 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. எனக்கு கிடைத்த தகவலின் படி அணையின் நீர்மட்டம் 8 மணி நேரத்தில் 8 மீட்டர் வரை உயர்ந்துள்ளது. இதை நினைத்து உள்ளூர் மக்களே ஆச்சரியப்படுகின்றனர்.
எதுவாக இருப்பினும் இது ஒரு சோக சம்பவம். இது ஒரு இயற்கை பேரிடர். விதியை யாரும் மாற்ற முடியாது என நான் நினைக்கிறேன். எது நடக்க இருக்கிறதோ, அது நடந்தே தீரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வாறு மந்திரி பேசிய சர்ச்சை கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக், அணையை கட்டிய ஒப்பந்ததாரரான பெரிய ஊழல் சுறாவை காப்பாற்றுவதற்காக அப்பாவி நண்டுகள் மீது மந்திரி பழிபோடுகிறார் என கூறினார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதேபோல் தேசியவாத கட்சியின் மூத்த தலைவரான ஜிதேந்திர அவாத் நேற்று தனது ஆதரவாளர்களுடன் மும்பை நவ்பாடா போலீஸ் நிலையத்திற்கு நண்டுகளுடன் வந்தார். அணை உடைப்புக்கு காரணமான நண்டுகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவற்றை கைது செய்யுமாறு அவர்கள் போலீசாரை கேட்டுக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.