மயிலாப்பூரில் பரிதாபம்; தண்ணீர் வாளியில் தவறி விழுந்து 11 மாத பெண் குழந்தை சாவு

மயிலாப்பூரில், தண்ணீர் வாளியில் தவறி விழுந்து 11 மாத பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.

Update: 2019-07-05 23:21 GMT
அடையாறு,

சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தில் உள்ள ஒரு குடிசை வீட்டில் வசித்து வருபவர் விமல் (வயது 25). இவர், தி.மு.க. பிரமுகர் ஒருவர் வீட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அம்பிகா. இவர்களுக்கு தனுஷ்கா என்ற 11 மாத பெண் குழந்தை உள்ளது.

நேற்று முன்தினம் இரவு விமல் வேலைக்கு சென்று இருந்தார். வீட்டில் குழந்தை தனுஷ்காவுடன் அம்பிகா தனியாக இருந்தார். வீட்டில் குழந்தை தூங்கிக்கொண்டு இருந்ததால், அம்பிகா கதவை சாத்திவிட்டு வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டார்.

கடையில் காய்கறி வாங்கிக்கொண்டு சிறிதுநேரம் கழித்து வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். அங்கும் இங்கும் தேடினார்.

அப்போது குழந்தை தனுஷ்கா, வீட்டில் தண்ணீர் பிடித்து வைத்திருந்த வாளியில் தலைகுப்புற விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குழந்தையை தூக்கிக்கொண்டு திருவல்லிக்கேணியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை தனுஷ்கா ஏற்கனவே தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.

தூங்கி எழுந்த குழந்தை, வீட்டில் யாரும் இல்லாததால் தட்டு தடுமாறி நடக்கும் போது அங்கிருந்த தண்ணீர் வாளியில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என தெரிகிறது. இதுபற்றி மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்