விளைநிலங்களில் மின்கோபுரங்களை அமைக்கக்கூடாது - தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

விளைநிலங்களில் மின்கோபுரங்களை அமைக்கக் கூடாது என்று கோவையில் நடந்த தமிழக விவசாயிகள் சங்க பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-07-05 22:30 GMT
கோவை,

விவசாய போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தவும், விவசாயத்தை காப்பாற்றக் கோரியும் தமிழக விவசாயிகள் சங்கம்(கட்சி சார்பற்றது) சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. கோவை டாடாபாத் பகுதியில் நேற்று மாலை ஏராளமான விவசாயிகள் திரண்டனர். அவர்கள் டாடாபாத் 6 சந்திப்பு பகுதியில் இருந்து பேரணியாக புறப்பட்டு பொதுக்கூட்டம் நடந்த சிவானந்தா காலனியை அடைந்தனர். அங்கு இரவில் பொதுக்கூட்டம் நடந்தது.

பேரணியை மாநில தலைவர் எஸ்.எஸ். ரங்கசாமி தொடங்கி வைத்து பேசினார். பொதுக்கூட்டத்துக்கு மாநில பொதுச் செயலாளர் டி.வேணுகோபால் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர்கள் ஹரிமூர்த்தி, கண்ணன், மாநில உதவி செயலாளர்கள் கோனப்பன், வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் டி.வேலுசாமி வரவேற்றார்.

கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழகத்தை வறட்சியில் இருந்து காப்பாற்ற அத்திக்கடவு- அவினாசி திட்டம், தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும். வனவிலங்குகள் காட்டு பகுதியில் இருந்து வெளியே வராமல் தடுக்க வனத்துறை தவறியதால் விவசாய பயிர் சேதம், உயிர் சேதம் ஏற்படுகிறது. பால் மற்றும் விவசாய விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவின் அடிப்படையில் உரிய விலை கொடுக்க வேண்டும். மோட்டார் வாகனம் மற்றும் தனி நபர் இன்சூரன்ஸ் திட்டம் போல பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் திட்டத்தை மாற்றி அமைத்து உடனடியாக முழுபலன் கிடைக்க வகை செய்ய வேண்டும்.

விவசாயிகளின் அனுமதி இல்லாமல் விளைநிலங்களை எடுக்கக் கூடாது. மீண்டும் எட்டுவழி சாலை என்ற பெயரில் புதிய சாலை போடுவதை கைவிட வேண்டும். மின் கோபுரங்களை விளை நிலங்களில் அமைக்காமல் கேரளாவை போன்று பூமிக்கு அடியில் மின்சார வயர்களை கொண்டு செல்ல வேண்டும். எரிவாயு குழாய்களை விளைநிலங்களில் அமைக்காமல் சாலை ஓரமாக கொண்டு செல்ல வேண்டும்.

நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம், கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம், கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.120-க்கு குறையாமல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வரும் பூமிக்கு பட்டா கொடுக்க வேண்டும். அரசு வேலைவாய்ப்பு, மருத்துவ படிப்புகளில் விவசாயிகளின் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பவானி ஆற்றில் சொந்த செலவில் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்பவர்களுக்கு நிரந்தர சட்ட அனுமதி கொடுக்க வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்