குடிமராமத்து திட்டத்தில் ரூ.37 லட்சத்தில் காயரம்பேடு பெரிய ஏரி சீரமைக்கும் பணி தொடக்கம், பொதுமக்கள் மகிழ்ச்சி

குடிமராமத்து திட்டத்தில் ரூ.37 லட்சத்தில் காயரம்பேடு பெரிய ஏரி சீரமைக்கும் பணி தொடங்கியது. இதையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2019-07-05 23:07 GMT

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு கிராமத்தில் தமிழக அரசின் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி 170 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் உள்ள நீரை பயன்படுத்தி சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் அடைந்து வருகிறது. இந்த நிலையில் ஏரியில் உள்ள மதகுகளை புதிதாக கட்டுவதற்கும் ஏரிக்கரை புனரமைப்பு பணிகளை செய்வதற்கும் விவசாயிகள் தொடர்ந்து தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்–அமைச்சர் இந்த ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.37 லட்சத்தில் காயரம்பேடு பெரிய ஏரியை சீரமைக்க நிதி ஒதுக்கினார்.

இதனையடுத்து நேற்று காலை காயரம்பேடு பெரிய ஏரியில் ரூ.37 லட்சம் மதிப்பில் புனரமைப்பு பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு செங்கல்பட்டு பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி ஏரி சீரமைக்கும் பணியை தொடங்கிவைத்தார். இதில் காயரம்பேடு முன்னாள் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் திருவாக்கு, உதவி பொறியாளர் கிருஷ்ணபிரபு, பணி ஆய்வாளர் பாலமுருகன், கிராம மக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

காயரம்பேடு பெரிய ஏரியில் உள்ள 2 மதகுகள் புதிதாக அமைக்கப்படும். மேலும் கலங்கல் பகுதி சீரமைக்கப்படும். ஏரியை சுற்றியுள்ள கரைகள் பலப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காயரம்பேடு பெரிய ஏரி புனரமைக்கும் பணி தொடங்கியதால் இந்த ஏரியை நம்பியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்