அம்பையில் பஸ்- மொபட் மோதல்; கணினி ஆபரேட்டர் சாவு பெண் அரசு ஊழியர் படுகாயம்

அம்பையில் அரசு பஸ்- மொபட் மோதிக்கொண்ட விபத்தில் கணினி ஆபரேட்டர் பரிதாபமாக இறந்தார். பெண் அரசு ஊழியர் படுகாயமடைந்தார்.

Update: 2019-07-05 22:15 GMT
அம்பை, 

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பண்டாரகுளத்தை சேர்ந்தவர் மரிய காஸ்லின் ராஜா. இவருடைய மனைவி மகதலின் புஷ்பா (வயது 35). இவர் கடையம் யூனியன் அலுவலகத்தில் தற்காலிக கணினி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.

அம்பை அருகே உள்ள மன்னார்கோவிலை சேர்ந்தவர் பாலசரஸ்வதி (21). இவர் அதே அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று 2 பேரும் ஒரு மொபட்டில் அம்பை தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் அதே மொபட்டில் கடையத்திற்கு புறப்பட்டனர். மொபட்டை பாலசரஸ்வதி ஓட்டினார்.

மொபட் தாலுகா அலுவலகம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அந்த பகுதியில் வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக பாலசரஸ்வதி ஓட்டி சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 பேரும் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து, உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

உடனே அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மகதலின் புஷ்பா பரிதாபமாக உயிரிழந்தார். பாலசரஸ்வதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்