காதல் திருமணம் செய்த தம்பதியை கொலை செய்தது ஏன்? கைதான பெண்ணின் தந்தை பரபரப்பு வாக்குமூலம்
காதல் திருமணம் செய்த புதுமண தம்பதியை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து பெண்ணின் தந்தை போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.
விளாத்திகுளம்,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் திருமேனி மகன் சோலைராஜ் (வயது 23). பெயிண்டர். இவருடைய மனைவி பேச்சியம்மாள் என்ற ஜோதி (20). வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் 2 பேரும் காதலித்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி இரவில் வீட்டின் வளாகத்தில் தரையில் பாய் விரித்து படுத்து தூங்கிய சோலைராஜ், ஜோதி ஆகிய 2 பேரும் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். தமிழகத்தை உலுக்கிய இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து, குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கொலையாளிகளை பிடிப்பதற்காக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் உத்தரவின்பேரில், விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஜோதியின் தந்தையான குளத்தூரை அடுத்த பல்லாகுளத்தைச் சேர்ந்த அழகர் (45) தன்னுடைய மகள் வேறு சமுதாயத்தைச் சேர்ந்த வாலிபரை காதலித்து திருமணம் செய்ததால், அவர்கள் 2 பேரையும் ஆணவக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அழகரை போலீசார் கைது செய்தனர்.
அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
நான் வெளிநாட்டில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தேன். எனக்கு மனைவி மற்றும் 3 மகள்கள், ஒரு மகன். மூத்த மகள் ஜோதி-சோலைராஜ் காதல் விவகாரம் தெரியவந்ததும், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தேன். பின்னர் எனது மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க திட்டமிட்டேன். அதற்கு முன்பாக அவருக்கு பூப்புனித நீராட்டு விழாவை நடத்துவதற்கு பத்திரிகை அச்சிட்டு உறவினர்களுக்கு வழங்கினேன். ஆனால் அதற்குள்ளாக ஜோதி, சோலைராஜ் ஆகிய 2 பேரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இது எனக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே ஜோதியிடம், நீ எனக்கு மகள் கிடையாது, உனக்கும், என்னுடைய குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று திட்டவட்டமாக கூறி விட்டு, ஒதுங்கி விட்டேன். பின்னர் வெளிநாட்டு வேலைக்கு செல்லாமல், கடந்த 3 வாரங்களாக குளத்தூரில் உள்ள சிமெண்டு கல் தயாரிக்கும் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்தேன். தினமும் காலையில் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று விட்டு, இரவில் வீட்டுக்கு திரும்பி செல்வேன்.
இந்த நிலையில் ஜோதி, என்னுடைய வீட்டுக்கு அடிக்கடி செல்போனில் தொடர்புகொண்டு, தாய், தங்கைகள், தம்பி ஆகியோரிடம் பேசி வந்தார். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். மகளை முற்றிலுமாக ஒதுக்கிய பின்னர் அவர் மீண்டும் சொந்தம் கொண்டாடி பேசி வந்தது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே பெற்ற மகள் என்றும் பாராமல் ஜோதியையும், சோலைராஜையும் தீர்த்துக்கட்ட திட்டமிட்டேன்.
இதற்காக இரவில் வேலை முடிந்ததும், மகளின் வீட்டை நோட்டமிட்டவாறு மோட்டார் சைக்கிளில் செல்வேன். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டி இருந்ததால், திரும்பி சென்று விடுவேன். ஒருமுறை அந்த வழியாக சென்றபோது, சோலைராஜின் தாயார் என்னிடம் நலம் விசாரித்தார். அப்போது எதேச்சையாக அங்கு வந்ததாக கூறிச் சென்றேன்.
கடந்த 3-ந்தேதி இரவில் வேலை முடிந்ததும், மகளின் வீட்டை நோட்டமிட்டவாறு மோட்டார் சைக்கிளில் சென்றேன். அப்போது சோலைராஜிம், ஜோதியும் வீட்டின் வளாகத்தில் தரையில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்து இருந்த நான் நைசாக வீட்டின் வளாகத்துக்குள் நுழைந்து, பெற்ற மகள், மருமகன் என்றும் பாராமல் அவர்கள் 2 பேரையும் அரிவாளால் மாறி மாறி வெட்டிக்கொலை செய்தேன். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று நாலாட்டின்புத்தூரில் பதுங்கி இருந்த என்னை போலீசார் கைது செய்தனர்.
இவ்வாறு அழகர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து அழகரை போலீசார் நேற்று மாலையில் கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.
புதுமண தம்பதியை படுகொலை செய்வதற்கு ஒரே ஆயுதமே பயன்படுத்தப்பட்டு இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். எனவே அழகர் மட்டும் இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். எனினும் இந்த இரட்டைக்கொலையில் வேறு யாரேனுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே படுகொலை செய்யப்பட்ட சோலைராஜ், ஜோதி ஆகிய 2 பேரின் உடல்களும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மாலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களின் உடல்களை ஒரே ஆம்புலன்சில் ஏற்றி குளத்தூர் பெரியார் நகருக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களின் உடல்களுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் கண்ணீர்மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்குள்ள மயானத்தில் உடல்கள் அருகருகே அடக்கம் செய்யப்பட்டது.