கொரடாச்சேரி அருகே மதுபோதையில் பெற்றோர் மீது தாக்குதல் வாலிபர் கைது
கொரடாச்சேரி அருகே மதுபோதையில் பெற்றோரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கொரடாச்சேரி,
கொரடாச்சேரி அருகே உள்ள கீழப்பாலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னையன் (வயது 55). இவருடைய மனைவி அஞ்சம்மாள் (50). இவர்களுடைய மகன் மகாலிங்கம் (35). இவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வது வழக்கம். சம்பவத்தன்றும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மகாலிங்கம் வீட்டிலிருந்த தனது மகனை அடித்துள்ளார் இதனை பார்த்த அஞ்சம்மாள் குடித்துவிட்டு வந்து எனது பேரனை ஏன் அடிக்கிறாய்? என கேட்டு தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகாலிங்கம் அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து அஞ்சம்மாளை தாக்கியுள்ளார்.
இதை தடுக்க வந்த அரவது தந்தை சின்னையனையும் தாக்கினார். இதில் காயமடைந்த அஞ்சம்மாளும், சின்னையனும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து அஞ்சம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கொரடாச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்மின்சிசாரா வழக்குப்பதிவு செய்து மகாலிங்கத்தை கைது செய்தனர்.