வகுப்பு தேர்வில் தோல்வி, பிளஸ்-2 மாணவர் விஷம் குடித்து தற்கொலை
வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-2 மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை,
கோவை பீளமேடு அருகே உள்ள கருப்பண்ண கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ராஜா (வயது 55), கட்டிட தொழிலாளி. இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். 4-வது மகனான அரவிந்தன் (17), அந்தப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருடைய 3 சகோதரர்களும் கட்டிட வேலைக்கு சென்று வந்ததால், விடுமுறை நாட்களில் அரவிந்தனும் அவர்களுடன் வேலைக்கு செல்வது வழக்கம். அவர் எவ்வளவு படித்தாலும் புரியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வகுப்பறையில் நடத்தப்படும் தேர்வுகளில் தோல்வி அடைந்தார். இது அவருக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. இது குறித்து தனது நண்பர்கள் மற்றும் பெற்றோரிடம் கூறி புலம்பி உள்ளார். அதற்கு அவர்கள் கவலைப்பட வேண்டாம், நீ ஒழுங்காக படி அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெற்றுவிடுவாய் என்று கூறி உள்ளனர்.
இருந்தபோதிலும் சரியாக படிக்க முடியாததால் அரவிந்தன் மனம் உடைந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அரவிந்தன் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் சாணிப்பவுடரை (விஷம்) குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அரவிந்தன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.