கறம்பக்குடி அருகே, ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பொதுமக்கள் படுத்து நூதன போராட்டம்
கறம்பக்குடி அருகே உள்ளாட்சி நிர்வாகத்தை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குறட்டை சத்தம் எழுப்பி தூங்கும் நூதன போராட்டம் நடைபெற்றது. அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வர தாமதமானதால் சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள முள்ளங்குறிச்சி ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் 1,200 பேர் பதிவு செய்துள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக வேலை வழங்கப்படவில்லை. மேலும் சில தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியும் உள்ளது. இந்த ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையும் தீர்க்கப்படாமல் உள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் முள்ளங்குறிச்சி பகுதி 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு குறட்டை விட்டு தூங்குவது போல் நூதன போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சேசுராஜ் தலைமையில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செங்கோடன், விவசாய சங்க செயலாளர் ஆரோக்கியசாமி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் நேற்று காலை முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகம் வந்தனர். அவர்கள் அந்த அலுவலகத்தின் முன்பு படுத்து குறட்டைவிட்டு தூங்குவது போல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டம் தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. ஆனால் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனால் ஆத்திர மடைந்த பொதுமக்கள் முள்ளங்குறிச்சி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தியும், அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் லெட்சுமி, வட்டார வளர்ச்சி அதிகாரி அமிர்தவள்ளி, கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகளிடம் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பகுதி வாரியாக 100 நாள் வேலை வழங்கப்படும். சம்பள நிலுவைத்தொகை 5 நாட்களில் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் நூதன போராட்டம் கறம்பக்குடி பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியது.