திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தண்ணீர் இல்லாததால் டயாலிசிஸ் செய்ய முடியாமல் நோயாளிகள் அவதி
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில தண்ணீர் இல்லாததால் டயாலிசிஸ் செய்ய முடியாமல் நோயாளிகள் அவதியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகள் திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர்,
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதம் முதல் டயாலிசிஸ் செய்வதற்கு 22 கருவிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த கருவிகள் மூலமாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாரம் தோறும் டயாலிசிஸ் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தண்ணீர் இல்லாமல் டயாலிசிஸ் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் கடுமையாக அவதிப்பட்டனர். இதில் சிகிச்சைக்காக வந்த பெண் ஒருவருக்கு டயாலிசிஸ் செய்யமுடியாமல் காத்திருந்தபோது திடீரென அவருக்கு உடல்நலம் குறைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தண்ணீர் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாது என டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கல்லூரி முதல்வரிடம் முறையிட்டபோது அவர் மின்வாரியத்தில் உள்ள பிரச்சினை நாங்கள் என்ன செய்ய முடியும் என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகள் மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது தண்ணீர் பிரச்சினையை சரி செய்து உடனடியாக டயாலிசிஸ் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.