வேளாண்மை உபகரணங்கள் வாங்க விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் மானியம்
வேளாண்மை உபகரணங்கள் வாங்க விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படும் என மாவட்ட வேளாண்மை துறை துணை இயக்குனர் தெரிவித்தார்.;
திருமருகல்,
திருமருகல் ஒன்றியம் அம்பல் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கான கூட்டுப்பண்ணையம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திருமருகல் வேளாண்மை உதவி இயக்குனர் சிவக்குமார் தலைமை தாங்கினார். வேளாண்மை துணை அலுவலர் ரவிச்சந்திரன், உதவி அலுவலர்கள் சுரேஷ்குமார், ஜெயராமன், ஜாகிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் செந்தில்குமார் வரவேற்றார். நாகை மாவட்ட வேளாண்மை துறை துணை இயக்குனரும், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளருமான கிருஷ்ணபிள்ளை கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல் படுத்தி வருகிறது. அந்த வகையில் திருமருகல் ஒன்றியத்தில் கொங்கராயநல்லூர், மேலப்பபூதனூர், சீயாத்தமங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாயிகள் கூட்டுப்பண்ணைய குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதேபோல அம்பல் கிராமத்திலும் விவசாயிகள் கூட்டுப்பண்ணையம் குழுக்கள் அமைத்து விவசாயிகள் பயன்பெறலாம்.
இந்த கூட்டுப்பண்ணையம் விவசாயிகளுக்கு அரசு சார்பில் டிராக்டர், பவர்டில்லர், நெல் அறுவடை எந்திரம், நடவு எந்திரம், வைக்கோல் திரட்டும் எந்திரம் உள்ளிட்ட வேளாண்மை உபகரணங்கள் வாங்க ரூ.5 லட்சம் மானியமாக வழங்கப்படும். மேலும் பிரதமர் கிசான் சமான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் அட்மா திட்ட தொழில்நுட்ப துணை மேலாளர்கள் எழிலரசன், கார்த்திகேயன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் திருமேனி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சதாரமேஷ் உள்பட முன்னோடி விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.