நாகையில் குழந்தை கடத்துபவர் என கருதி வாலிபரை தாக்கிய பொதுமக்கள்

நாகையில், குழந்தை கடத்துபவர் என கருதி வாலிபரை பொதுமக்கள் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2019-07-05 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகை முதலாவது கடற்கரை சாலை அண்ணாசிலை அருகே வாலிபர் ஒருவர் கையில் சாக்குப்பையை வைத்து கொண்டு நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவனிடம் பேசிக்கொண்டு சிறிது தூரம் நடந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதை பார்த்தவுடன் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அந்த வாலிபர் சிறுவனை கடத்தி செல்வதாக கூறி சத்தம் போட்டனர். உடனே அங்கு நின்றவர்கள் ஓடி வந்து அந்த சிறுவனை அழைத்து சென்று வீட்டில் கொண்டு சென்று விட்டனர்.

பின்னர் அந்த வாலிபரை குழந்தை கடத்துபவர் என்று கருதி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சரமாரியாக தாக்கி அருகில் இருந்த கழிவுநீர் வாய்க்காலில் தள்ளி விட்டனர். இதில் அந்த வாலிபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அந்த வாலிபரால் அங்கிருந்து நகரக்கூட முடியாத நிலை ஏற்பட்டு அங்கேயே கிடந்தார்.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். பொதுமக்கள் பலமாக தாக்கியதில் அவர் எதுவும் பேசமுடியாத நிலையில் இருந்தார்.

இதையடுத்து போலீசார் ஆட்டோவில் அந்த வாலிபரை ஏற்றிச்சென்று நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் நாகையில் புதிய மற்றும் பழைய பஸ் பஸ்நிலையம், அவுரித்திடல், பப்ளிக் ஆபிஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் குப்பை அள்ளும் நபர் என்பது தெரிய வந்தது.

அவர் பேசும்மொழி தெரியாத காரணத்தால் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்