சிக்னலில் நின்ற போது சிக்கினார், பறிகொடுத்த மோட்டார் சைக்கிளை திருடனோடு மடக்கிய என்ஜினீயர் - மதுரையில் சம்பவம்
மதுரையில் பறிகொடுத்த தனது மோட்டார் சைக்கிளை பார்த்த என்ஜினீயர், விரைந்து செயல்பட்டு திருடனை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.;
மதுரை,
மதுரை துவரிமான் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 27), என்ஜினீயர். இவர் குரு தியேட்டர் அருகே அலுவலகம் வைத்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் அவர் தனது அலுவலகம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்த்த போது அதனை காணவில்லை. உடனே அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, அதில் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே பாலமுருகன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்தார்.
அதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளின் ஆவணங்களை எடுத்துக் கொண்டு நண்பருடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் அரசரடி சிக்னலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளை ஒருவர் ஒட்டி வந்து, அதே சிக்னலில் நின்றார். இதை பார்த்த பாலமுருகன் உடனே இறங்கிச் சென்று அந்த வாலிபரிடம் மோட்டார் சைக்கிள் குறித்து கேட்டுள்ளார். இதனால் மிரண்ட அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை அப்படியே விட்டுவிட்டு நடு ரோட்டில் ஓட்டம் பிடித்தார்.
உடனே பாலமுருகன் அந்த வாலிபரை பின்தொடர்ந்து ஓடினார். இதனை பார்த்த பொதுமக்கள் முதலில் ஏதோ தகராறு என்று நினைத்தனர். ஆனால் அவரை பாலமுருகன் தொடர்ந்து விரட்டி சென்று பிடித்து கரிமேடு போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் அவரிடம் விசாரித்த போது, தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த மாரியப்பன்(29) என்பதும், அவர் வேலை தேடி மதுரை வந்த போது மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது.
மேலும் அவர் மீது வேறு ஏதாவது மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு உள்ளதா என்பதை போலீசார் விசாரித்தனர். அதில் சென்னையில் அவர் மீது 2 வழக்குகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.