ரத்னகிரி அணை உடைப்பு சம்பவம் : மேலும் 4 பேரின் உடல்கள் மீட்பு
மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்து வருகிறது. இந்த நிலையில் பெரு மழை காரணமாக ரத்னகிரி மாவட்டத்தின் சிப்லுன் தாலுகாவில் திவாரே என்ற அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
மும்பை,
கடந்த 3-ந் தேதி இரவு திடீரென இந்த அணை உடைந்ததால், அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் 7 கிராமங்களை சூழ்ந்தது. அந்த கிராமங்களை சேர்ந்த 12 வீடுகளை வெள்ளம் அடித்து சென்றது.
மேலும் வெள்ளத்தில் சிக்கி 23 பேர் அடித்து செல்லப்பட்டனர். இதில் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இ்ந்த நிலையில் நேற்று மேலும் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன்மூலம் மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 15- ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களின் அடையாளம் கண்டு உடல்களை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்து வருகின்றனர். மாயமான மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே நீர்வளத்துறை மந்திரி கிரிஷ் மகாஜன் அணை உடைப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறுகையில், “இந்த சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தும். அணை உடைப்பிற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அணை வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள் 4 மாதங்களுக்குள் மறு சீரமைப்பு செய்து தரப்படும்” என்றார்.