மழைநீர் சேமிப்பு பணிகளை 15-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் - அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு

மழைநீர் சேமிப்பு பணிகளை வருகிற 15-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2019-07-04 22:45 GMT
கடலூர்,

மத்திய அரசு கடந்த 1-ந்தேதி முதல் ஜல் சக்தி அபியான் எனும் திட்டத்தை தொடங்கி உள்ளது. அதன் அடிப்படையில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் மகேந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் அன்புசெல்வன் பேசியதாவது:-

அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தினை உடனடியாக செயல் படுத்த வேண்டும். பயன்பாடில்லாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை புனரமைத்து மழை நீர் சேமிப்பு அமைப்பாக மாற்ற வேண்டும். அனைத்து அரசு கட்டிடங்கள், பொது கட்டிடங்கள் ஆகியவற்றில் மழை நீர் சேமிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து ஏரிகள், குளங்கள் ஆகியவற்றினை தூர் வாரி நீர்ப்பிடிப்பு பகுதியாக மாற்ற வேண்டும். ஊரக பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மழை நீர் சேமிப்பு கட்டமைப்பு பணிகளான தடுப்பணைகள், வரப்பு கட்டுதல், பண்ணை குட்டை அமைத்தல், பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மழை நீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்றுதல் ஆகிய பணிகளை செய்ய வேண்டும்.

மரக்கன்றுகள் நடும் பணி தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். அரசு அலுவலர்கள் மழைநீர் சேமிப்பு பணிகளை வருகிற 15-ந்தேதிக்குள் (திங்கட்கிழமை) முடிக்க வேண்டும். மேலும் பொது மக்கள் அனைவரும் தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் அவரவர் வீடுகளில் முறையாக மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்திட தன்னார்வத்துடன் முன்வர வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் பேசினார்.

மேலும் செய்திகள்