திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை திட்ட பணி
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
முருகபவனம்,
திண்டுக்கல் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக திண்டுக்கல் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையொட்டி இந்த மருத்துவமனையை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நிகராக அரசு தரம் உயர்த்தியது. இதனால் இங்கு புதிய சிகிச்சை பிரிவு கட்டிடங்கள், நவீன சிகிச்சைக்கான மருத்துவ கருவிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கப்பட்டன. இதையொட்டி ஆங்காங்கே குழிகள் தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டன. இதனால் மருத்துவமனை முழுவதும் குண்டும் குழியுமாக தற்போது காட்சியளிக்கிறது. வாகனங்கள் மற்றும் நடந்து செல்வதற்கு கூட லாயக்கற்றதாக மருத்துவமனை வளாகம் உள்ளது. இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் நோயாளிகள் பெரும் அவதியடைந்து வருவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது;-
அரசு மருத்துவமனைக்கு பாதாள சாக்கடை திட்டம் அவசியமானது. அதனால் இங்கு பாதாள சாக்கடை திட்ட பணி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் மருத்துவமனையில் உள்ள அனைத்து சிகிச்சை பிரிவுகளும் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டன. இந்த திட்டத்தை திண்டுக்கல் மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. விரைவில் இதனை முடிக்க மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வலியுறுத்தி வருகின்றோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்குவதற்கு முன்பு மருத்துவமனை வளாகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிமெண்டு கற்கள் பதிக்கப்பட்டு இருந்தன. குழிகள் தோண்டும் போது அவைகள் அப்புறப்படுத்தப்பட்டன. பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்த பின் தோண்டி எடுத்த சிமெண்டு கற்களையே மீண்டும் பதிக்கலாம். இதனால் செலவு மிச்சமாகும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.