குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 19 மின்மோட்டார்கள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீரை மின்மோட்டார் வைத்து உறிஞ்சுவதாக ஊராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

Update: 2019-07-04 22:30 GMT
கந்தர்வகோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீரை மின்மோட்டார் வைத்து உறிஞ்சுவதாக ஊராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் (கிராம ஊராட்சிகள்) குமரன் மற்றும் ஊராட்சி ஒன்றிய துணை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் அடங்கிய குழுவினர் கந்தர்வகோட்டை மாரியம்மன் கோவில் தெரு, யாதவர் தெரு, பெருமாள்கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தனர். அப்போது 19 வீடுகளில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்களின் வீடுகளில் இருந்து 19 மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 19 மின் மோட்டார்கள் ஊராட்சி நிர்வாக அலுவலகத்திற்கு கொண்டு வந்து வைக்கப்பட்டது. இதுகுறித்து ஆணையர் குமரன் கூறுகையில், முறையற்ற வகையில் மின்மோட்டார்களை பயன்படுத்தியவர்களின், மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களின் மீது அபராத தொகையினை விதித்தும், குடிநீர் இணைப்புகளுக்கான கட்டணங்களை வசூல்செய்து, உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதேபோன்று ஊராட்சி ஒன்றியம் முழுவதிலும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள கிராமங்களில் இத்தகைய நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்தார். மேலும் குடிநீர் இணைப்பு கட்டணம், வீட்டுவரி கட்டணம் ஆகியவைகளை உடனடியாக வசூல் செய்ய அனைத்து ஊராட்சி செயலாளர்களுக்கும் உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்