தேங்காய் வியாபாரி வீட்டில் 25 பவுன் நகை-ரூ.2¼ லட்சம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

தேங்காய் வியாபாரி வீட்டில் புகுந்து 25 பவுன் நகை மற்றும் ரூ.2¼ லட்சத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2019-07-04 23:00 GMT
கரூர்,

கரூர் எல்.ஜி.பி.நகர் 2-வது கிராசை சேர்ந்தவர் குணசேகர் (வயது 35). இவர், தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், கவுசல்யாவுக்கும் திருமணமாகி ஓராண்டு ஆகிறது. இவர்களது வீட்டின் தரைதளம் காலியாக உள்ளது. முதல் தளத்தில் குணசேகரின் பெற்றோரான மருதமுத்து- காமாட்சியும், 2-வது தளத்தில் குணசேகர்-கவுசல்யா தம்பதியும் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் தளத்தில் குணசேகரின் தந்தை மருதமுத்துவும், தாய் காமாட்சியும், 2-வது தளத்தின் வெளிப்பகுதியில் குணசேகரனும், கவுசல்யாவும் தூங்கிகொண்டிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை சிறுநீர் கழிப்பதற்காக மருதமுத்து அறையை விட்டு வெளியே வர முயற்சித்தார். அப்போது கதவு வெளிபக்கமாக தாள்ப்பாழ் போடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர், 2-வது தளத்தின் வெளியே தூங்கி கொண்டிருந்த தனது மகனை செல்போனில் தொடர்பு கொண்டு கீழே இறங்கி வந்து கதவை திறக்குமாறு கூறினார். அப்போது உடனடியாக அங்கு வந்த குணசேகர் கதவை திறந்து விட்டார். இதையடுத்து சந்தேகம் அடைந்த குணசேகரனும், மருதமுத்துவும் முதல் தளத்தில் சமையலறையில் வைக்கப்பட்டிருந்த பீரோவை சென்று பார்த்தனர். அப்போது பீரோ திறந்து கிடந்தது. மேலும் அதனுள்ளே இருந்த ரூ.1½ லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

நகை-பணம் திருட்டு

அதைத் தொடர்ந்து 2-வது தளத்திற்கும் வந்து பார்த்து உள்ளனர். அப்போது அங்கு மற்றொரு அறையில் பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.65 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் குணசேகர் புகார் கொடுத்தார். மேலும் வீட்டு பால்கனி வழியாக ஏறி மர்ம நபர்கள் மாடி பகுதிக்கு வந்து திருட்டை அரங்கேற்றியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியிலுள்ள கடைகளிலிருந்த சி.சி.டி.வி. கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என்பது பற்றியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரல் ரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து ரேகை பதிவுகளை சேகரித்தனர். வீடு புகுந்து நகை-பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 25 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் திருடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்