குடிமராமத்து பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்
ஈரோடு மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடந்தது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், குடிமராமத்து பணிகளை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம் துறை) அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் ரூ.17 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் 65 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் ரூ.1 கோடியே 59 லட்சம் செலவில் 6 பணிகளும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ரூ.28 லட்சத்து 75 ஆயிரம் செலவில் ஒரு பணியும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் ரூ.4 கோடியே 51 லட்சம் செலவில் 14 பணிகளும் நடைபெற உள்ளன.
மேலும் பவானி சட்டமன்ற தொகுதியில் ரூ.1 கோடியே 45 லட்சம் செலவில் 5 பணிகளும், பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் ரூ.49 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 2 பணிகளும், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் ரூ.6 கோடியே 43 லட்சம் செலவில் 25 பணிகளும், அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.1 கோடியே 9 லட்சம் செலவில் 7 பணிகளும் நடைபெற உள்ளது. இந்த பணிகள் அனைத்தையும் தங்குதடையின்றி போர்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
கூட்டத்தில் கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சங்கம், காலிங்கராயன் மதகு பாசன விவசாயிகள் சங்கம், தடப்பள்ளி வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கம், அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கம், வரட்டுப்பள்ளம் பாசன விவசாயிகள் சங்கம், ஓடத்துறை ஏரி பாசன விவசாயிகள் சங்கம், மேட்டூர் மேற்கு கரை முறைநீர் பாசன விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.