வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஆகஸ்ட் 5-ந் தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ந் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
வேலூர்,
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ந் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுதாக்கல் வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் தேர்தல் தொடர்பாக வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதுதொடர்பான அறிவிப்பாணை முறையாக அரசிதழில் வருகிற 11-ந் தேதி (வியாழக்கிழமை) வெளியிடப்படும். அன்றைய தினமே வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 18-ந் தேதி வேட்புமனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் 19-ந் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான இறுதிநாள் 22-ந் தேதியாகும். அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அடுத்த மாதம் 5-ந் தேதி வாக்குப்பதிவும், 9-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. 11-ந் தேதி தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு மற்றும் வேலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும். கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மூன்றாம் பாலினத்தவர் 102 பேர் உள்பட 14 லட்சத்து 26 ஆயிரத்து 991 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் ஆவர்.
தேர்தலில் வாக்களிக்க 690 வாக்குச்சாவடி மையங்களில் 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. அதில், 133 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு 133 நுண்பார்வையாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணியில் 3,200 மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தலில் 1,880 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் வி.வி.பேட்டுகளும் பயன்படுத்தப்படும். தேர்தல் நன்னடத்தை விதிகளை அமல்படுத்தவும், 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் 18 பறக்கும்படை குழுக்கள், 18 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் கட்டுப்பாட்டு அறை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் செயல்படும்.
வேலூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. அடுத்த மாதம் 11-ந் தேதி வரை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம், மனுநீதி நாள் முகாம், அம்மா திட்ட முகாம், விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம், அரசு விழாக்கள் நடைபெறாது. மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற அலுவலகங்களும் தேர்தல் விதிமுறைக்காக பூட்டி ‘சீல்’ வைக்கப்படும். ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் டெபாசிட்தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்க ஏற்பாடு செய்யப்படும். தேர்தலை அமைதியாக நடத்திட பொதுமக்கள், அரசியல் கட்சினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார், தேர்தல் தாசில்தார் விஜயகுமார், அலுவலக உதவியாளர் முரளி ஆகியோர் உடனிருந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆற்காடு, அணைக்கட்டு, காட்பாடி, சோளிங்கர், கே.வி.குப்பம், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய தொகுதிகளுக்குட்பட்ட 53 ஏரிகளில் ரூ.12 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு கலெக்டர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடப்பதாக இருந்தது.
இந்த நிலையில் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. எனவே இன்று நடக்க இருந்த கலந்தாய்வு கூட்டம் தேர்தல்நடத்தை விதிகளின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.