நாகையில் ஆட்டோ டிரைவர் வீடு தீயில் எரிந்து நாசம் போலீசார் விசாரணை

நாகையில் ஆட்டோ டிரைவர் வீடு தீயில் எரிந்து நாசமானது. இதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update: 2019-07-04 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகை ஆரியநாட்டு தெருவை சேர்ந்தவர் மணி மாறன்(வயது 46). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி இளவரசி. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு மணிமாறன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென மணிமாறனின் வீடு தீப்பிடித்து எரிந்தது. இதை அந்த வழியாக நடந்து சென்றவர்கள் பார்த்து மணிமாறன் வீட்டின் கதவை தட்டி எழுப்பி வீடு தீப்பிடித்து எரிவதை கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த மணிமாறன் மற்றும் குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியது. இதுகுறித்து நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீ மேலும் பரவாமல் தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.

இதில் வீட்டில் இருந்த பீரோ, கட்டில்கள், குளிர் சாதன பெட்டி உள்பட அனைத்து தளவாட பொருட்களும் எரிந்து சேதமடைந்தன. இதன் சேதமதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் மணிமாறன் மகன், மகள்கள் ஆகியோரின் படிப்பு சான்றிதழ்கள் மற்றும் விளையாட்டு துறையில் பெற்ற சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலானது.

இதுகுறித்து நாகை டவுன் போலீஸ் நிலையத்தில் மணிமாறன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்