பெருமாநல்லூர் அருகே விளைநிலங்களில் உயர்அழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணி

பெருமாநல்லூர் அருகே விளைநிலங்களில் உயர்அழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணி தொடங்கியது. இதற்கிடையில் விவசாய நிலங்களில் அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து பணியில் ஈடுபடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.;

Update: 2019-07-04 23:00 GMT
பெருமாநல்லூர், 

மின் தொடரமைப்பு கழகம் சார்பில், உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணி ஏற்கனவே நடைபெற்றது. இந்த கோபுரங்கள் அமைக்கும் பணி விவசாய விளைநிலங்களில் அமைக்கப்படுவதை காரணம் காட்டி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, போராட்டங்களையும் நடத்தினர். இதன் காரணமாக மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நில உரிமையாளர்கள் தொடுத்திருந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து பல்வேறு பகுதிகளில் உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணி தொடங்கியது. பெருமாநல்லூர் அருகே உள்ள பொங்குபாளையம் பகுதியிலுள்ள வித்யா என்பவருக்கு சொந்தமான விளைநிலத்திற்கு மின் தொடரமைப்பு கழக செயற்பொறியாளர் அருளரசு, திருப்பூர் ஆர்.டி.ஓ. செண்பகவல்லி, திருப்பூர் வடக்கு தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் சென்றனர். அங்கு அதிகாரிகள் அந்த இடத்தை பார்வையிட்டனர்.

பின்னர் அதிகாரிகள் முன்னிலையில், மின் தொடரமைப்பு கழக பணியாளர்கள் மின்கோபுரம் அமைக்கும் பணியை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர் வெளியூர் சென்று இருந்த நிலையில் அவருடைய விளை நிலத்தில் அவருக்கு தகவல் தெரிவிக்காமல் அத்துமீறி நுழைந்து பணிகளை மேற்கொண்டு வருவதாக மற்ற விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் அசம்பாவிதம் சம்பவங்கள் ஏதும் நிகழாமலிருக்க பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்