வங்கி கடன் வாங்கி தருவதாக ரூ.24 ஆயிரம் மோசடி செய்தவர் கைது
வங்கி கடன் வாங்கி தருவதாக ரூ.24 ஆயிரம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல்,
நாமக்கல் சாவடி தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் கார்த்திகேயன். கடந்த மாதம் 19-ந் தேதி இவரது செல்போனிற்கு ஒருவர் தனியார் நிதிநிறுவனத்தில் இருந்து பேசுகிறேன். உங்களுக்கு கடன் ‘அப்ரூவல்’ ஆகி உள்ளது என கூறி உள்ளார். மேலும் கார்த்திகேயனின் போட்டோ, ஆதார் கார்டு, பான் கார்டு அனுப்பினால் வீடு கட்டுவதற்கு கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதையடுத்து கார்த்திகேயனும் அந்த நபர் தொடர்பு கொண்ட செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலம் தனது ஆவண நகல்களை அனுப்பி வைத்து உள்ளார்.
அடுத்தநாள் அந்த நபர் மீண்டும் தொடர்பு கொண்டு ரூ.3 லட்சம் கடன் வேண்டுமானால் வங்கி மேலாளர் குமரேசன் என்பவரது செல்போனில் தொடர்பு கொள்ள சொன்னதாகவும், அதன்படி தொடர்பு கொண்ட போது குமரேசன் என்பவர் கார்த்திகேயனுக்கு தனியார் வங்கி ஒன்றில் கணக்கு தொடங்கி உள்ளதாகவும், அதில் கடன் தொகையில் 10 சதவீதம் அதாவது ரூ.30 ஆயிரத்தை ஆன்லைனில் செலுத்துமாறும் கூறி உள்ளார். இதையடுத்து கார்த்திகேயன், குமரேசன் கொடுத்த தகவலின் பேரில் வேறு ஒருவரின் வங்கி கணக்கிற்கு ரூ.24 ஆயிரம் அனுப்பி உள்ளார். 2 நாட்கள் கழித்து, கடன் பற்றிய எந்த தகவலும் இல்லாததால் குமரேசனுக்கு போன் செய்து கேட்டு உள்ளார். அப்போது நீங்கள் யார் என்று தெரியாது, யார் வங்கி கணக்கில் பணம் செலுத்தினீர்களோ அவரிடமே கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கார்த்திகேயன் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.24 ஆயிரத்தை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரேசனை (வயது 30) கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைதான குமரேசன் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.