மாவட்டத்தில் 163 போலீசார் இடமாற்றம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
சேலம் மாவட்டத்தில் 163 போலீசாரை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் உத்தரவிட்டார்.
சேலம்,
சேலம் மாவட்ட போலீசில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், தலைமை ஏட்டு, முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை போலீசாருக்கான விருப்ப இடமாறுதல் வழங்கும் முகாம் நேற்று சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் தலைமை தாங்கினார்.
அப்போது சீனியர் அடிப்படையில் ஒவ்வொரு போலீசாரும் வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு எந்த போலீஸ் நிலையங்களில் காலி பணியிடம் இருக்கிறது என்பது திரையில் காண்பிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் தேர்ந் தெடுத்த போலீஸ் நிலையங் களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது. இதற்கான ஆணையை அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் உடனடியாக வழங்கினார்.
இந்த முகாமில் ஆயுதப்படையில் பணியாற்றி வந்த 113 பேருக்கு மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணியாற்ற இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. மேலும் மாவட்ட மதுவிலக்கு பிரிவில் பணியாற்றிய 27 பேர் உள்ளூர் போலீஸ் நிலையங்களுக்கும், அங்கு பணியாற்றிய 23 பேர் மதுவிலக்கு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மொத்தம் 163 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த முகாமில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அன்பு, சுரேஷ்குமார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.