லாரி டிரைவர் கொலை வழக்கு: சேலம் கோர்ட்டில் 6 பேர் சரண்

லாரி டிரைவர் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட 6 பேர் நேற்று சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

Update: 2019-07-04 22:30 GMT
சேலம், 

சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்தவர் லாரி டிரைவர் அருள்ஜோதி(வயது 36). ரவுடியான இவர் மீது ஆள்கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல வழக்குகள் சங்ககிரி போலீஸ் நிலையத்தில் பதிவாகி உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் சங்ககிரியில் இருந்து குமாரபாளையம் செல்லும் சாலையில் உள்ள கவுண்டனூர் சுடுகாட்டில் அருள்ஜோதி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த கொலை குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை தொடர்பாக சங்ககிரி அருகே உள்ள தேவந்தகவுண்டனூரை சேர்ந்த கனகராஜ்(28), மேட்டூர் புதூர் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை(31), கிடையூரை சேர்ந்த தர்மலிங்கம்(22), தினேஷ்குமார்(27), அரவிந்த்(25), சின்னகவுண்டனூர் பகுதியை சேர்ந்த முருகேசன்(26) ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் போலீசாரால் தேடப்பட்ட கனகராஜ் உள்பட 6 பேரும் நேற்று சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 2-வது கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இதையடுத்து அவர்களை வருகிற 11-ந் தேதி வரை சேலம் மத்திய சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு சிவா உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்