காரிமங்கலம் அருகே சித்தப்பா கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

காரிமங்கலம் அருகே சொத்து தகராறில் சித்தப்பாவை அடித்து கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவரை ஒரு ஆண்டுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-07-04 23:15 GMT
காரிமங்கலம்,

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் அடிலம் ஊராட்சி சென்னம்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 67). இவருக்கு லோகநாதன் (46), மணி (40) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கிடையே நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த ஆண்டு இருவருக்கும் சொந்தமான நிலத்தை பிரிப்பது பற்றி ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பாகப்பிரிவினை நடைபெற்றது. அப்போது லோகநாதன், தனக்கு 3 மகன்கள் உள்ளதாகவும், அதனால் பிரச்சினைக்குரிய நிலத்தில் கூடுதலாக தனக்கு நிலம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு மணி சம்மதிக்காததால் மறுநாள் லோகநாதன், ஓய்வு பெற்ற சர்வேயர் ஒருவரை வைத்து நிலத்தை அளக்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மணி அங்கு சென்று அதை தட்டி கேட்டுள்ளார். அதனால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதை அறிந்ததும் மணிக்கு ஆதரவாக அங்கு வந்த சித்தப்பா விவசாயி வடிவேல் (60) தகராறு செய்து கொண்டிருந்த லோகநாதன் தரப்பு ஆட்களிடம் சமாதானம் பேச முற்பட்டார். அப்போது வடிவேலை உருட்டு கட்டைகளால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த வடிவேல் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதுகுறித்து காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் விசாரணை நடத்தி 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.

சித்தப்பா கொலை வழக்கில் தேடப்பட்டு தலைமறைவாக இருந்த லோகநாதன் நேற்று தனது சொந்த ஊரான சென்னம்பட்டிக்கு வந்திருப்பதாக காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் சென்னம்பட்டிக்கு சென்று லோகநாதனின் வீட்டை சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை பாலக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்