2-ம் கட்டமாக விளையாட்டு விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல்
2-ம் கட்டமாக விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி மற்றும் தங்குமிட வசதியுடன், சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2019-20-ம் ஆண்டிற்கு விளையாட்டு விடுதி மற்றும் விளையாட்டு பள்ளிகளில் 2-ம் கட்டமாக மாணவ, மாணவிகள் சேருவதற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய www.sdat.tn.gov.in என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பத்தினை ஆன்லைனில் பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள் வருகிற 8-ந் தேதியாகும். மேலும் சென்னையில் மாநில தேர்வுகள் நடைபெறும் மையங்களில் வருகிற 9-ந் தேதி காலை 8 மணியளவில் நேரில் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் தடகளம், இறகுப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, ஆக்கி மற்றும் ஸ்குவாஷ், தேக்வாண்டோ (7-ம் வகுப்பு மட்டும்) ஆகிய விளையாட்டுகளிலும் மாணவிகளுக்கு தடகளம் மற்றும் இறகு பந்து ஆகிய போட்டிகளிலும் பயிற்சி வழங்கப்படும்.
இந்த விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளாக விளங்குவதற்கு 7, 8 மற்றும் 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் இதில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.