தாளவாடி அருகே பரிதாபம் வீடு தீப்பிடித்து எரிந்தது; தாய்-மகள் கருகி சாவு

தாளவாடி அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் தாய்-மகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-07-04 23:00 GMT
தாளவாடி, 

தாளவாடி அருகே உள்ள மல்லன்குழி கிராமத்தை சேர்ந்தவர் நாகண்ணா. இவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவருடைய மனைவி ராஜம்மாள் (வயது 38). இவர்களுக்கு கீதா (19) என்ற மகளும், மாதேவபிரசாத் (17) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் அனைவரும் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். ராஜம்மாளும், கீதாவும் கூலி வேலை செய்து வந்தனர். மாதேவபிரசாத் கேரளாவில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜம்மாளும், கீதாவும் வீட்டில் படுத்து தூங்கினர். நேற்று காலை 6 மணிக்கு அந்த வீடு திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டம் பரவியது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடோடி வந்து, வீட்டில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. ஆனால் குடிசை வீடு முழுவதும் எரிந்து நாசம் ஆனது. மேலும் வீட்டில் தூங்கி கொண்டிருந்த ராஜம்மாளும், கீதாவும் உடல் கருகி பிணமாக கிடந்தனர். இதுபற்றி தாளவாடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீ விபத்து நடந்த வீட்டை பார்வையிட்டனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குடிசை வீட்டில், விறகு அடுப்பில் தீ மூட்டித்தான் சமையல் செய்து வந்துள்ளனர். இதனால் சமையல் செய்து முடித்தபின்பு தீயை அணைக்காமல் விட்டதால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது கீதாவும், ராஜம்மாளும் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

தீ விபத்தில் தாய்-மகள் உடல் கருகி இறந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்