விதிமுறை மீறி இயக்கப்பட்ட 7 செப்டிக் டேங்க் லாரிகள் பறிமுதல் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

திருப்பூரில் விதிமுறை மீறி இயக்கப்பட்ட 7 செப்டிக் டேங்க் லாரிகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Update: 2019-07-03 22:45 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் செப்டிக் டேங்க் கழிவுகளை தனியார் லாரிகள் மூலம் அகற்றி வருகிறார்கள். இவ்வாறு அகற்றும் கழிவுகளை குடியிருப்பு பகுதியில் உள்ள திறந்த வெளி சாக்கடை கால்வாயில் இரவு நேரங்களில் திறந்து விட்டு செல்வதாக புகார் எழுந்தது. மேலும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் உத்தரவின் பேரில் மாநகர் நல அதிகாரி பூபதி தலைமையிலான சுகாதார பிரிவு அதிகாரிகள் நேற்று காலை பிரிட்ஜ் வே காலனி பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 10 செப்டிக் டேங்க் லாரிகள் நின்றன. அதிகாரிகளை கண்டதும் 3 லாரிகளை அங்கிருந்து ஓட்டிச்சென்றனர். 7 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள மாட்டுக்கொட்டகை சுகாதார பிரிவு அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைத்தனர்.

இதுகுறித்து மாநகர் நல அதிகாரி பூபதி கூறியதாவது:-

மனித கழிவுகளை மனிதன் அகற்றும் தடை சட்டத்தின் படி தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தியே செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற வேண்டும். அதுபோல் இவ்வாறு அகற்றும் பணியில் ஈடுபடும் லாரி உரிமையாளர்கள் மாநகராட்சியில் உரிய அனுமதி பெறுவது அவசியம். மாநகராட்சி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட 6 இடங்களில் மட்டுமே கழிவுகளை கொட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் இந்த விதிமுறைகளை கடைபிடிக்காமல் இயக்கிய 7 செப்டிக் டேங்க் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் பிரிட்ஜ்வே காலனி பகுதியில் உள்ள கால்வாயில் இரவு நேரங்களில் கழிவுகளை திறந்து விடுவதால் அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட 7 லாரி உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட லாரியின் உரிமத்தை ரத்து செய்யவும் வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்