ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்; கார் டிரைவர் கைது

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-07-03 22:45 GMT

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை நகர எல்லையில் கலால் துறையை சேர்ந்த சோதனைச்சாவடி உள்ளது. நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் இன்ஸ்பெக்டர் அனுமந்தன், ஏட்டு யுவராஜ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் செம்மரக்கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.5 லட்சம் மதிப்புள்ள 1 டன் எடை கொண்ட 9 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தப்பி ஓட முயன்ற கார் டிரைவரை மடக்கி படித்து விசாரணை செய்ததில், அவர் சென்னை வள்ளலார் நகரை சேர்ந்த காளிதாஸ் (வயது 25) என்பது தெரிய வந்தது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் இருந்து சென்னை அடையாறுக்கு செம்மரக்கட்டைகள் கடத்த முயன்றது தெரியவந்தது. போலீசார் காளிதாசை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை சீதஞ்சேரியில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்