மேட்டுப்பாளையத்தில், அரசு டாக்டரை தாக்கிய தொழிலாளி கைது
மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டரை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த குட்டையூர் பாவேந்தர்நகரை சேர்ந்தவர் ராஜன் (வயது 43) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ருக்மணி (36). இவர்கள் கோவிலுக்கு சென்று விட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள தியேட்டர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போது லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த ருக்மணியை மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல டாக்டர் வலியுறுத்தினார்.
ஆனால் பெண்ணின் உறவினர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த டாக்டர்களும், கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால் ருக்மணியை, அவரது உறவினர்கள் மீண்டும் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ருக்மணி பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் காலதாமதமாக சிகிச்சை அளித்ததாக கூறி ஆஸ்பத்திரி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த சிலர், டாக்டர் லட்சுமணகுமார், நர்சு மகாலட்சுமி, ஊழியர் குமாரசாமி ஆகியோரை தாக்கினர். இதை கண்டித்தும், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரியும் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் கருப்புபட்டை அணிந்து நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த தாக்குதல் தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி, மேட்டுப்பாளையம் குட்டையூர் பாவேந்தர் நகரை சேர்ந்த தொழிலாளி தங்கராஜ் (வயது 39) என்பவர் அரசு ஆஸ்பத்திரி டாக்டரை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இதையடுத்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.