கோவை அருகே, குப்பைக்கிடங்கில் தீ விபத்து - புகைமூட்டத்தால் நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல்

கோவை அருகே குப்பைக்கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் இருந்து கிளம்பிய புகைமூட்டத்தால் நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

Update: 2019-07-03 22:15 GMT
சரவணம்பட்டி,

கோவையை அடுத்த சரவணம்பட்டி அருகே சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் சேரும் குப்பைகள் கவுசிகா நதி படித்துறை ஓரத்தில் கொட்டப்படுகிறது. அங்கு திடக்கழிவு மேலாண்மை கிடங்கு உள்ளது. இந்த குப்பைக்கிடங்கில் நேற்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது காற்று வீசியதால் குப்பைக்கிடங்கு முழுவதும் தீ பரவி எரிய தொடங்கியது. அப்போது குப்பைகளை கொட்ட வந்த லாரி ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் பேரூராட்சி செயல் அதிகாரி பார்த்திபன் விரைந்து வந்து பார்வையிட்டார்.

இதையடுத்து அன்னூர் மற்றும் கணபதி தீயணைப்பு நிலைய வீரர்கள் குப்பைக்கிடங்கில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அப்போது குப்பைக்கிடங்கில் பற்றிய தீ புகைமூட்டமாக குடியிருப்பு பகுதிகளில் பரவியது. இதன் காரணமாக பொது மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது.

மேலும் அங்குள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் புகை மூட்டம் பரவியது. இதனால் அந்த ஆஸ்பத்திரிகளில் இருந்த நோயாளிகள் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர். இதையடுத்து அந்த நோயாளிகள் வேறு ஆஸ்பத்திரிக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, குப்பைக்கிடங்கில் தானாக தீப்பிடிக்க வாய்ப்பு இல்லை. யாரோ தீ வைத்துள்ளனர். குப்பையில் கிடக்கும் உலோகங்களை பிரித்து எடுப்பதற்காக சிலர் குப்பைக்கிடங்கிற்கு தீ வைத்து விடுகிறார்கள். எனவே பேரூராட்சி அதிகாரிகளும், போலீசாரும் கண்காணித்து குப்பைக்கிடங்கில் தீவைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகை மூட்டம் காரணமாக பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இனியாவது குப்பைக் கிடங்கில் தீப்பிடிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்