கேரள கம்யூனிஸ்டு செயலாளரின் மகனுக்கு முன்ஜாமீன் : மும்பை கோர்ட்டு வழங்கியது
பார் அழகி கற்பழிப்பு புகாரில் சிக்கிய கேரள கம்யூனிஸ்டு செயலாளரின் மகனுக்கு முன்ஜாமீன் வழங்கி மும்பை கோர்ட்டு உத்தரவிட்டது.
மும்பை,
கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் தொழில் அதிபர் பினாய் பாலகிருஷ்ணன். மும்பையில் வசித்து வரும் பீகாரை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர், அவர் மீது மும்பை வெர்சோவா போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.
அந்த புகாரில், கடந்த 2009-ம் ஆண்டு தான் துபாயில் டான்ஸ் பார் அழகியாக வேலை செய்தபோது, பினாய் பாலகிருஷ்ணனின் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கற்பழித்ததாகவும், அவர் மூலம் தனக்கு 8 வயது மகன் இருப்பதாகவும் கூறியிருந்தார். .
அதன்பேரில் போலீசார் பினாய் பாலகிருஷ்ணன் மீது கற்பழிப்பு, மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஆதாரங்களை திரட்டவும், பினாய் பாலகிருஷ்ணனை கைது செய்யவும் கடந்த வாரம் மும்பை போலீசார் கேரளா விரைந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் அவரை தேடப்படும் குற்றவாளியாக மும்பை போலீஸ் அறிவித்தது.
இதற்கிடையே போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்கும்படி பினாய் பாலகிருஷ்ணன் தரப்பில் மும்பை தின்தோஷியில் உள்ள கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மனுவை நேற்று விசாரித்த கோர்ட்டு, பினாய் பாலகிருஷ்ணனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.