டாக்டர் பயல் தற்கொலை வழக்கு: 3 பெண் டாக்டர்கள் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு
டாக்டர் பயல் தற்கொலை வழக்கில் கைதான 3 பெண் டாக்டர்கள் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
மும்பை,
மும்பை நாயர் ஆஸ்பத்திரியில் மருத்துவ மேல்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்த பெண் டாக்டர் பயல் (வயது26). இவர் மருத்துவக் கல்லூரி விடுதி அறையில் கடந்த மே மாதம் 22-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். டாக்டர் பயலை சாதி ரீதியாக துன்புறுத்தி அவரை தற்கொலைக்கு தூண்டியதாக மூத்த டாக்டர்களான ஹேமா, பக்தி, அங்கிதா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியது மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
டாக்டர் பயல் தற்கொலை வழக்கை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கைதான 3 டாக்டர்களும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ஜாமீன் கேட்டு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் அவர்களை ஜாமீனில் விடுவிக்க கோர்ட்டு மறுத்து விட்டது.
இ்ந்த நிலையில், 3 பேரும் ஜாமீன் கோரி மும்பை ஐகோர்ட்டை அணுகி உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்து உள்ள மனுவில் இந்த வழக்கில் எங்கள் 3 பேரையும் வேண்டுமென்றே சிக்க வைத்து உள்ளதாக தெரிவித்து உள்ளனர். விரைவில் மனு விசாரணைக்கு வரும் என தெரிகிறது.