திருமங்கலம் அருகே டிரைவர் கொலை: உடல் மீது லாரியை ஏற்றி விபத்து என நாடகமாடியது அம்பலம், குவாரி ஊழியர் சிக்கினார்

திருமங்கலம் அருகே டிரைவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு உடல் மீது லாரியை ஏற்றி விபத்தில் இறந்ததாக நாடகமாடிய ஒருவர் சிக்கினார்.

Update: 2019-07-03 23:15 GMT
பேரையூர்,

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கீழகாடனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார்(வயது 35). இவருக்கு செல்வி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். குமார், காடனேரி பகுதியில் உள்ள கல் குவாரியில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை டி.கல்லுப்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி குமார் இறந்து கிடப்பதாக டி.கல்லுப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் குமாரின் உடலை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் போலீல் புகார் அளித்தனர். உடனே போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று குமாரின் உடலை பார்த்தனர். அப்போது அவரது கழுத்து பகுதியில் காயங்கள் இருந்தன.

குமார் வேலை செய்த கல்குவாரிக்கு சென்று போலீசார் தங்களது விசாரணையை தொடங்கினர். அங்கு கார்த்திக்(30) என்பவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. லாரி டிரைவர் குமாரை கொலை செய்துவிட்டு விபத்தில் அவர் இறந்துபோனதாக நாடகம் அரங்கேற்றியது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-

லாரி டிரைவர் குமார், தான் வேலை பார்க்கும் குவாரியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாராம். இதனால் அங்கு வேலை பார்க்கும் கார்த்திக் உள்பட சிலருக்கும், அவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு குமாரை, கார்த்திக் செல்போனில் தொடர்பு கொண்டு வேலை இருப்பதாக குவாரி பகுதிக்கு வரவழைத்துள்ளார். அங்கு கார்த்திக், சந்தோஷ் ஆகியோர் குமாரிடம் தகராறு செய்து தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் 2 பேரும் சேர்ந்து குமாரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து குமாரின் உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து டி.கல்லுப்பட்டி அருகில் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலைக்கு கொண்டு வந்தனர். அதன்பிறகு உடன் வேலை பார்க்கும் பிரதாப், மணி ஆகியோரை லாரியோடு வரவழைத்து, விபத்தில் இறந்ததாக நம்ப வைப்பதற்காக குமாரின் உடலை சாலையில் போட்டு, அதன் மீது லாரியை ஏற்றியுள்ளனர். இதையடுத்து கார்த்திக் உள்பட 4 பேரும் அங்கிருந்து தப்பியது தெரியவந்தது.

பிடிபட்ட கார்த்திக்கிடம் பேரையூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், டி.கல்லுப்பட்டி இன்ஸ்பெக்டர் விஜயகாண்டிபன் ஆகியோர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரதாப், மணி, சந்தோஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்