வாலிபரை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி : மனைவி, மைத்துனி கைது
முகத்தில் மிளகாய் பொடியை தூவி வாலிபரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற அவரது மனைவி, மைத்துனியை போலீசார் கைது செய்தனர்.;
மும்பை,
மும்பை சயான் கோலிவாடா ரெயில்வே குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது37). இவரது மனைவி சரண்யா (27). கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்து வந்தனர்.
இதுபற்றி அறிந்த சரண்யாவின் சகோதரி கல்யாணி (23), அவரது கணவர் டேவிட் மற்றும் சரண்யாவின் தந்தை ஆகியோர் நேற்று மதியம் 12.30 மணி அளவில் ஜி.டி.பி. ரெயில் நிலையம் அருகே இது தொடர்பாக தினேசை சந்தித்து பேசினார்கள். அப்போது சரண்யாவும் உடன் இருந்தார்.
அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் உண்டானது. இதில், ஆத்திரமடைந்த சரண்யா தான் கொண்டு வந்திருந்த மிளகாய் பொடியை கணவர் தினேசின் முகத்தில் வீசினார். அந்த நேரத்தில் டேவிட் தன்னிடம் இருந்த கத்தியால் தினேசின் கழுத்தில் குத்தினார்.
கல்யாணியும், அவரது தந்தை இருவரும் தினேசை தாக்கி உள்ளனர். பின்னர் 4 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து சயான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து காயமடைந்த தினேசை மீட்டு சயான் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சரண்யா மற்றும் கல்யாணி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள டேவிட் மற்றும் சரண்யாவின் தந்தையை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.