இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தல்

இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-07-03 22:45 GMT
பனைக்குளம்,

ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 26-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் செல்வராஜ், நம்புவேல், மற்றொரு செல்வராஜ், பாலகிருஷ்ணன் ஆகிய 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் அவர்களது படகு மற்றும் இதர உபகரணங்களை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் அந்த மீனவர்களின் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்லும் போதெல்லாம் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்வதும், மீனவர்களை துன்புறுத்து வதும் தொடர்ந்து பல ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது.

கச்சத்தீவு பிரச்சினை முழுமையான தீர்வுக்கு வராத நிலையில் மீன்பிடிக்கும் உரிமையை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் இந்திய மீனவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைப்பதற்கான முயற்சியில் இந்திய அரசு முனைப்பாக ஈடுபட வேண்டும். கச்சத்தீவு பகுதி ராமநாதபுரம் மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது என்பதை ஆவணங்கள் நிரூபித்துக்கொண்டிருக்கின்றன.

இந்திய அரசியல் சாசனத்தின் விதிமுறைகளை முறைப்படி திருத்தி அமைப்பதன் மூலம் தான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து இருக்க முடியும். ஆனால் இத்தகைய நடைமுறை எதுவும் நிகழவே இல்லை. எனவே கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்டு நாம் தக்கவைப்பதற்கான வழிகள் தெளிவாகவே இருக்கின்றன. மத்திய அரசு உடனே இதில் கவனம் செலுத்த வேண்டும். இலங்கை சிறையில் வாடும் ராமேசுவரம் மீனவர்களை உடனடியாக விடுவித்து இந்தியாவிற்கு அழைத்து வர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்